< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
29 Sep 2022 10:04 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான கட்டிடம்

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடம் பராமரிக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். உடனே கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடச்சூர்

மின்தடையால் அவதி

மொடக்குறிச்சியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மொடக்குறிச்சி

குவிந்துள்ள குப்பைகள்

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் வேட்டைக்காரன் கோவில் வருகிறது. அந்த ரோட்டில் ஒரு பங்க் எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், வேட்டைக்காரன்கோவில்

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

அத்தாணி பவானி ரோட்டில் பழைய மாரப்பா தியேட்டர் அருகே பாலம் ஒன்று உள்ளது. இங்கு மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே பாலம் முதல் கைகாட்டி பிரிவு வரை மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அத்தாணி

வேகத்தடை வேண்டும்

ஈரோடு கே.என்.கே. ரோட்டில் உள்ள தபால் நிலையத்தில் வேகத்தடை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உடனே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு

சுத்தமாக்க வேண்டும்

அந்தியூா் அருகே பிரம்மதேசம் புதூர் ஓடைப்பள்ளத்தில் உள்ள சுடுகாடு முழுவதும் முட்புதர்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால் பிணத்தை எடுத்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்தை சுத்தம் செய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சி.சரவணன், பிரம்மதேசம் புதூர்

சாய்ந்து நிற்கும் பலகை

ஈரோடு சுவஸ்திக் கார்னர் சிக்னல் பகுதியில் சத்திரோட்டின் தடுப்புச்சுவரில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் சேலம், நாமக்கல், பெருந்துறை, ரெயில் நிலையம், வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான வழிகாட்டி குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டி பலகை கீழே விழும் நிலையில் சரிந்து நிற்கிறது. வாகனங்கள் வேகமாக செல்லும்போது வழிகாட்டி பலகை விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வழிகாட்டி பலகையை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியா, ஈரோடு.

பாராட்டு

ஈரோட்டில் உள்ள அண்ணா தியேட்டர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு் தண்ணீர் வீணாக சென்றது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு்க்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஈரோடு

Related Tags :
மேலும் செய்திகள்