< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
31 Aug 2022 9:22 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம்

கொடுமுடியில் இருந்து நாகமநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் தன்னாசி அப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் உடைந்து காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொடுமுடி.

குப்பைகள் அகற்றப்படுமா?

கோபியில் இருந்து பச்சைமலை செல்லும் ரோட்டில் மொடச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கிறது. மேலும் அந்த குப்பையில் சிலர் தீ வைத்து விடுகிறார்கள். அதில் இருந்து எழும்பும் கரும்புகையால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கோபி.

சாலை வசதி வேண்டும்

ஈரோடு ஆனைக்கல்பாளையம்-ரங்கம்பாளையம் சுற்றுவட்டச்சாலையில் இருந்து வாய்க்கால் கரை வழியாக முள்ளாம்பரப்பு செல்லும் பாதை உள்ளது. ரிங் ரோட்டில் இருந்து எளையாம்பாளையம், கிளியம்பட்டி பகுதிகளுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகிறது. ஆனால், குண்டும் குழியுமாக இந்த ரோடு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே வாய்க்கால் கரை சாலையில் ஜல்லி போட்டு, தார் ரோடாக மாற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எளையாம்பாளையம்.

கொசுத்தொல்லை

கோபி நகராட்சி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கொசுத்தொல்லையை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

தேங்கிநிற்கும் கழிவுநீர்

ஈரோடு மாநகராட்சி திண்டல் அருகே உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் டெலிபோன் சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி கழிவு நீர் தேங்கி உள்ளது. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் இங்கு எப்போதும் சாக்கடை தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். வாகனங்கள் சாக்கடை மீது செல்வதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வடிகால் அமைத்து கழிவுநீர் வெளியேற சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டெலிபோன்சிட்டி.

மூடி போடப்படுமா?

கோபி அரசு மருத்துவமனை ரோட்டில் வாய்க்கால் ரோடு செல்லும் சாலை உள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனை எதிரில் குடிநீர் குழாய் செல்கிறது. இதற்காக அங்கு சிறிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு உள்ளது. ஆனால் தொட்டிக்கு மூடி போடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் தொட்டியில் மூடி போட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

பொதுமக்கள், கோபி.

தெருவிளக்கு பொருத்த வேண்டும்

ஈரோடு ரங்கம்பாளையம் அருகே முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் 7- வது திட்டப்பகுதி உள்ளது. இங்கு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கிருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் ஏராளமாக உள்ளனர். இங்குள்ள மின் கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை. எனவே இரவு நேரங்களில் நடந்து செல்ல அச்சமாக உள்ளது. இருட்டினை சாதகமாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் சாலையோரங்களிலேயே அமர்ந்து மதுகுடித்து வருகிறார்கள். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இங்கு ரங்கம்பாளையம் காமாட்சிஅம்மன் கோவில் முதல் குடியிருப்பு பகுதிவரை தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பகுதி-7, முத்தம்பாளையம்.

Related Tags :
மேலும் செய்திகள்