< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
28 Aug 2022 8:56 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கற்கள் அகற்றப்படுமா?

அத்தாணி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கொண்டுவந்து போடப்பட்ட கற்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இந்த வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் கற்கள் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்களை அகற்ற ஆவன செய்வார்களா?

சந்திரன், அத்தாணி.

பூட்டிக்கிடக்கும் தங்கும் விடுதி

கோபி நகராட்சிக்கு உட்பட்ட மொடச்சூர் சந்தை அருகில் ரூ.50 லட்சம் செலவில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வீடற்றவர்களுக்காக தங்கும் விடுதி கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இந்த விடுதி பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த விடுதியை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?

விஸ்வம், கோபி.

குவிந்துள்ள குப்பை

கோபி தெப்பக்குளம் கபிலர் வீதியில் குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. இந்த வழியாக செல்லும் ரோடு பஸ் நிலையத்துக்கும், கடைவீதிக்கும் செல்லும் முக்கிய பாதையாகும். இதனால் எப்போதும் வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும். அவ்வாறு செல்பவர்கள் மீது குப்பை தூசுபடுகிறது. எனவே கோபி நகராட்சி அதிகாரிகள் கபிலர் வீதியில் குவிந்துள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி கபிலர்வீதி.

பரபரப்பான ரோட்டில் பள்ளம்

ஈரோடு அகில்மேடு வீதியும், வாசுகி வீதியும் ஈரோடு பஸ்நிலையத்துக்கு பஸ்கள் வரும் முக்கிய பாதையாகும். ஆனால் இந்த ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. அதில் பெரிய பெரிய கற்களையும் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த வீதியில் பல முறை விபத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இனியாவது இந்த 2 வீதியிலும் உள்ள பள்ளங்களை அதிகாரிகள் சரிசெய்ய ஆவன செய்வார்களா?

பொதுமக்கள், வாசுகி வீதி. ஈரோடு.

குப்பைகள் அள்ளவில்லை

ஈரோடு மாநகராட்சி 21-வது வார்டு பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதியில் 3 வாரமாக வீடுகளில் தேங்கும் குப்பைகளை எடுத்து செல்லவில்லை. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை எடுக்க வரவில்லையே என்று சிலர் பொது இடங்களிலும் கொட்டிவிடுகிறார்கள். இதனால் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே ராதாகிருஷ்ணன் வீதியில் உடனே குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

பொதுமக்கள், பெரியவலசு.

தெருவிளக்குகள் பொருத்தப்படுமா?

ஈரோடு திண்டலில் இருந்து சோலார் செல்லும் ரிங் ரோட்டில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திண்டல்

ஆபத்தான பள்ளம்

ஈரோடு பெரியவலசில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த பள்ளத்தை மூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு

Related Tags :
மேலும் செய்திகள்