திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
சாணார்பட்டி ஒன்றியம் புகையிலைப்பட்டியில் இருந்து அதிகாரிப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-ராஜா, புகையிலைப்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில், பஸ் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் பதிக்கப்பட்ட பொது குடிநீர் குழாய்களில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ஆண்டிப்பட்டி.
வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வடக்கு புதுச்சத்திரத்தை அடுத்த கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதை பள்ளம், மேடாக காட்சியளிப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பால வேலையை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது மாற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
சாக்கடை கால்வாய் சேதம்
வேடசந்தூர் தாலுகா பிலாத்து அருகே வாளிசெட்டிப்பட்டி அங்கன்வாடி மையம் அருகே உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. கால்வாயின் மேற்புரத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாக்கடை கால்வாய்க்குள்ளேயே விழுந்து கிடக்கின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்குகிறது. அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் குழந்தைகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை சீர்செய்ய வேண்டும்.
-ஞானவேல், வாளிசெட்டிப்பட்டி.
பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டி 12-வது வார்டு காளியம்மன் கோவில் அருகே உள்ள கழிப்பறை பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் இரவில் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பூட்டி கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-சென்றாயபெருமாள், சக்கம்பட்டி.
கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அண்ணாநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் முறையாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.
-ராஜா, சிறுமலை.
வேகத்தடை அமைக்க வேண்டும்
வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருந்த வேகத்தடை அகற்றப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மாணவ-மாணவிகளும் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுமான், வத்தலக்குண்டு.
சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
பெரியகுளத்தை அடுத்த சருத்துப்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லட்சுமணன், சருத்துப்பட்டி.
சாலையில் தேங்கும் தண்ணீர்
சிங்கராஜபுரம்-ஓட்டனை கிராமத்துக்கு இடையே உள்ள தரைப்பாலம் அருகில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சிங்கராஜபுரம்.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.