திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்து வரும் மின்கம்பம்
ரெட்டியார்சத்திரம் தாலுகா நெட்டியப்பட்டியில் இருந்து புளியராஜக்காபட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
நிலக்கோட்டை தாலுகா பழைய சிலுக்குவார்பட்டியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் முகம் சுழித்தபடியே செல்லும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.
-சென்றாய பாண்டியன், பழைய சிலுக்குவார்பட்டி.
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோடாமல் அந்த பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை விரைவில் அமைக்க வேண்டும்.
-அய்யனார், கோம்பை.
சேதமடைந்த தரைப்பாலம்
திண்டுக்கல்-பழனி சாலையில் லாரிப்பேட்டை அருகே உள்ள தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் தரைப்பாலத்தின் மேற்பகுதியில் 2 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
திண்டுக்கல் வேடப்பட்டி பகுதி மற்றும் வெள்ளோடு செல்லும் சாலையோர பகுதி ஆகியவற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் விழுவதால் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரோஜா பிரியன், திண்டுக்கல்.
பயணிகள் நிழற்குடை சேதம்
கண்டமனூர் அருகே பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தில் நிழற்குடைக்குள் நிற்காமல் கொளுத்தும் வெயிலில் வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பந்துவார்பட்டி.
தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
காமயகவுண்டன்பட்டி-கம்பம் சாலையில் உள்ள முல்லைப்பெரியாறு பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் முல்லைப்பெரியாற்றில் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே முல்லைப்பெரியாற்று பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, காமயகவுண்டன்பட்டி.
தினமும் குப்பைகளை சேகரிக்க வேண்டும்
பழனி நேதாஜிநகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மன்சூர் அலி, பழனி.
குண்டும், குழியுமான சாலை
கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்லும் சாலையில் குளப்பகுதி அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ரமேஷ், நாராயணத்தேவன்பட்டி.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
---------------