திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு நன்றி
குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூர் பஸ்நிறுத்தம் அருகே சேதமடைந்த மின்கம்பம் பற்றிய செய்தி, 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்டு உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-சண்முகம், தி.கூடலூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. ஒருசில இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கிநின்று துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை அகற்றி, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
- பொதுமக்கள், அணைப்பட்டி சாலை.
மின்தடையால் அவதி
நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடைகாலமாக இருப்பதால் மின்தடை ஏற்படும் போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், சிலுக்குவார்பட்டி.
சுருளி அருவியில் குப்பைகள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அருவி பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் தின்று உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.
- பிரபு, கம்பம்.
கால்நடை மருத்துவமனை
சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமத்தில் செயல்படும் கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவது இல்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. கால்நடை மருத்துவமனை தினமும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், சீப்பாலக்கோட்டை.
கண்காணிப்பு கேமரா
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அண்ணாநகரில் கண்காணிப்பு கேமரா சாலையை நோக்கி இல்லாமல் மாறி இருக்கிறது. அதை சரியாக அமைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், சிறுமலை.
தடுப்புச்சுவர் சேதம்
பழனி அருகே மானூர் ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்து விட்டது. மேலும் தடுப்புச்சுவர் இருப்பதை அடையாளப்படுத்தும் வகையில் கயிறு கட்டப்பட்டு இருக்கிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. அதேபோல் தடுப்புச்சுவரை ஒட்டி நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
- அறிவாசான், மானூர்.
மயான பாதை ஆக்கிரமிப்பு
ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்ப பிள்ளைபட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- விஜயராஜ், கன்னியப்ப பிள்ளைபட்டி.
விபத்து அபாயம்
கடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் இருந்து வருசநாடு செல்லும் சாலையில் அபாய வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவியாடி கண்ணாடிகளை பொருத்த வேண்டும்.
- பொதுமக்கள், கடமலைகுண்டு.
வீணாகும் குடிநீர்
திண்டுக்கல் நாகல்நகர் மென்டோன்சா காலனியில் இருந்து நாகல்புதூருக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாக செல்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, நாகல்நகர்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.