< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 May 2023 7:00 PM GMT

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்தில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

ரெட்டியார்சத்திரத்தை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முழுமை பெற்றால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கம்பளிநாயக்கன்பட்டி குளத்தில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தும். இதனால் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள குளம் கழிவுநீர் குட்டையாக மாறிவிடும். எனவே குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

குடிநீர் தட்டுப்பாடு

பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் ராஜாபுரம் ரைஸ்மில் காலனி பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-விக்னேஷ், ராஜாபுரம்.

சேதமடைந்து வரும் மின்கம்பம்

திண்டுக்கல் கூட்டுறவு நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனே சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

குடிநீர் வசதி செய்ய வேண்டும்

தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைப்பட்டி ஜோதிநகரில் குடிநீர் வசதி முறையாக செய்யப்படவில்லை. பல இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

-விஜயராஜ், கன்னியப்பபிள்ளைப்பட்டி.

சுகாதாரமற்ற நிலையில் நடைமேடை

சின்னமனூர் புதிய பஸ்நிலையத்தில் தேனி செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுழித்தபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலைய நடைமேடையை சுத்தப்படுத்த வேண்டும்.

-கவுசிக், உ.அம்மாபட்டி.

பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

கோபால்பட்டி அருகே கனவாய்ப்பட்டி பங்களா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த தொட்டி சேதமடைந்து வருவதுடன் தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் முறையாக குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மேல்நிலை தொட்டியை முறையாக பராமரிப்பதுடன், குழாயில் ஏற்பட்ட உடைப்பையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், கனவாய்ப்பட்டி.

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி வேல்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஈஸ்வரன், கொத்தப்புள்ளி.

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி

பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.

சாலையை ஆக்கிரமித்த செடிகள்

கடமலைக்குண்டு-அண்ணாநகர் இடையே தேனி பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புதர்போன்று செடி-கொடிகள் வளர்ந்திருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்த செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.

---------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

---------------

Related Tags :
மேலும் செய்திகள்