திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பை
திண்டுக்கல்-திருச்சி சாலையில் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தை அருகே சி.டி.ஓ. காலனிக்கு திரும்பும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
தெருவிளக்கு வசதி வேண்டும்
திண்டுக்கல்லை அடுத்த கசவனம்பட்டி அருகே குறளபட்டி பகுதியில் தெருவிளக்கு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இரவில் கிராம பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியேவரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-சரவணக்குமார், கசவனம்பட்டி.
கொசுத்தொல்லையால் அவதி
திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கொடைரோடு பஸ் நிறுத்தம் அருகே வெட்டிய நிலையில் நுங்கு கூடு கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மழைக்காலத்தில் இந்த நுங்கு கூடுகளில் தண்ணீர் தேங்கியது. அவற்றில் கொசுப்புழுக்கள் உருவாகியதால் தற்போது அப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே நுங்கு கூடு கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.
-ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
சகதி காடாக மாறும் சாலை
திண்டுக்கல்லை அடுத்த கணவாய்ப்பட்டி பகுதியில் சாலை முறையாக அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் இந்த பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்குவதால் சாலை சகதி காடாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். பெண்கள் மழைக்காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக சாலை இருக்கிறது. எனவே சாலையையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கணவாய்ப்பட்டி.
அடிப்படை வசதிகள் வேண்டும்
நத்தம் தாலுகா பெரியமலையூர், சின்னமலையூர், வலசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாலை, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
எரியாத தெருவிளக்குகள்
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதான தெருவிளக்குகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-முருகேசன், உத்தமபாளையம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
மேகமலை அருவிக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், மேகமலை.
குண்டும், குழியுமாக மாறிய சாலை
வருசநாட்டில் இருந்து சிங்கராஜபுரத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, வருசநாடு.
மலைப்பாதையில் வீசப்படும் குப்பைகள்
கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையோரத்தில் தண்ணீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகளை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வீசிச்செல்கின்றனர். இதனால் அங்குள்ள வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் அபாயம் உள்ளது. எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-கனிஷ்கா, கம்பம்.
----------------உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
---------------