திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
சின்னமனூர் நகராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து தெருவில் ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-பொதுமக்கள், சின்னமனூர்.
10 ரூபாய் நாணயம் வாங்குவார்களா?
திண்டுக்கல்லில் உள்ள சில கடைகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இது பொதுமக்களுக்கு பெரும் மனஉளைச்சலை தருகிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை அனைத்து கடைகளிலும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உசேன், திண்டுக்கல்.
சாலையில் தேங்கும் மழைநீர்
திண்டுக்கல்-திருச்சி சாலையில் காந்திஜிநகரில் ரெயில்வே மேம்பாலம் அருகே மழை காலத்தில் குளம் போல் சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாரல் மழைபெய்தால் கூட நிலைமை மோசமாகி விடுகிறது. எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும்.
-ராஜேஷ், திண்டுக்கல்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
உத்தமபாளையம் நகரில் கிராம சாவடி, மெயின் பஜார், தேரடி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
தெருநாய்கள் தொல்லை
சின்னமனூர் நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் தனியாக செல்வோரை துரத்தி, துரத்தி தெருநாய்கள் கடிக்கின்றன. பகலில் குழந்தைகளை தெருவில் விளையாட விடுவதற்கு கூட பயமாக இருக்கிறது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-பொதுமக்கள், சின்னமனூர்.
சாலை ஓரத்தில் குப்பைகள்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிக்கப்படுகின்றன. அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஸ்வரி, திண்டுக்கல்.
விபத்து அபாயம்
திண்டுக்கல் அரண்மனை குளம் அருகே சாலையை ஒட்டி மின்சார டிரான்ஸ்பார்மர் இருக்கிறது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால், டிரான்ஸ்பார்மரில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும்.
-பரமேஸ்வரன், திண்டுக்கல்.
சாலை பள்ளத்தில் கழிவுநீர்
திண்டுக்கல் சாலை ரோட்டில் இருந்து திருவள்ளுவர் சாலைக்கு செல்லும் குறுக்கு தெருவில் தனியார் வங்கி அருகே பெரிய பள்ளம் உருவாகி விட்டது. இந்த பள்ளத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது கழிவுநீர் பிறர் மீது தெறிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாலை பள்ளத்தை சரிசெய்து, கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே உள்ள முத்தம்பட்டியில் ஒருசில தெருவிளக்குள் எரியவில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி விடுவதால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
-செல்வராஜ், முத்தம்பட்டி.
சாலையில் கிடக்கும் கற்கள்
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் சாக்கடை கால்வாயை மூடியிருந்த கற்களை பெயர்த்து சாலையில் போட்டு உள்ளனர். இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கற்களில் மோதி விபத்தில் சிக்கி கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே கற்களை அகற்ற வேண்டும்.
-செல்வம், கம்பம்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.