திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தேனி சின்னஓபுலாபுரம் ஏ.டி.காலனியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் குவியாதவாறு தினமும் அகற்றுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். பொதுமக்கள், சின்னஓபுலாபுரம்.
தண்ணீர் தொட்டி
கம்பம் நகராட்சி 8-வது வார்டு தாத்தப்பன்குளம் 3-வது தெருவில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் அருகே ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டி சேதமாகி விட்டது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால், பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்கள், கம்பம்.
குப்பை கிடங்கு மாற்றப்படுமா?
உத்தமபாளையம் தாலுகா நாராயணத்தேவன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் சேரும் குப்பைகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகை காற்றில் பரவுவதால் பொதுமக்களுக்கு கண்எரிச்சல், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. பொதுமக்களின் நலன்கருதி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பூமிநாதன், நாராயணத்தேவன்பட்டி.
சேதமான மின்கம்பம்
நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில், மதுரை பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவார்களா? ஊர்மக்கள், சிலுக்குவார்பட்டி.
ரெயில் பாதை அமைக்கப்படுமா?
திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் வழியாக லோயர்கேம்ப் வரை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இருமாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உள்பட பல ஊர்கள் வளர்ச்சி பெறும். எனவே ரெயில் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜன், தேனி.
குடிநீர் வினியோகம் சீராகுமா?
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி வெள்ளமடத்துப்பட்டி நத்தகாடுதோட்டம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். விக்ரம், ஸ்ரீராமபுரம்.
ஆற்று பாலம் அவசியம்
போடி அருகே அணைக்கரைபட்டி ஊராட்சி மேலப்பரவூ கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே கொட்டக்குடி ஆறு செல்கிறது. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது மேலப்பரவூ கிராம மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும். லோகேஸ்வரன், தேனி.
கூடுதல் தெருவிளக்குகள் தேவை
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டியில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே கூடுதலாக தெருவிளக்குகளை அமைப்பதோடு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். பிரேம்குமார், முத்தனம்பட்டி புதூர்.
அபாய மின்கம்பம்
திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் நூலகத்தின் அருகே உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து விடும் அபாய நிலையில் மின்கம்பம் இருப்பதால், அதை மாற்ற வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாண்டியன், நல்லமநாயக்கன்பட்டி.
பாதாள சாக்கடை அடைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஆர்.எஸ்.சாலையில் பாதாள சாக்கடை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடை போன்று செல்வதால், அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரியப்பன், திண்டுக்கல்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.