திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உயர் கோபுர மின்விளக்கு தேவை
வக்கம்பட்டி ஊராட்சி கள்ளுக்கடை பிரிவு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகள் இருளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கு வசதி வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
புழுதி பறக்கும் சாலை
செம்பட்டியை அடுத்த ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் அந்த இடம் முழுவதும் மணல் பரவி புழுதிமயமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது காற்றில் புழுதி பறந்து வாகன ஓட்டிகளை அவதியடைய செய்கிறது. எனவே மணலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், ஆத்தூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை அகற்றாததால் தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் அவற்றை சாப்பிடுகின்றன. அதனால் அவற்றுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.
-பொதுமக்கள், சீலப்பாடி.
போக்குவரத்து நெரிசல்
உத்தமபாளையம் நகரின் முக்கிய இடங்களான சாவடி பைப்பாஸ், கோட்டைமேடு, தேரடி போன்ற பகுதிகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்ருதீன், உத்தமபாளையம்.
குண்டும், குழியுமான சாலை
கோபால்பட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் பெரிய பள்ளம் இருக்கிறது. வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு வாகனங்களில் வருபவர்கள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைப்பதுடன் பள்ளதையும் மூட வேண்டும்.
-குமார், கோபால்பட்டி.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கம்பத்தை அடுத்த நாராயணத்தேவன்பட்டி அருகே சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் உரைகிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் கம்பம் பிரிவு அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-ஜீவா, சுருளிப்பட்டி,
தேங்கி கிடக்கும் கழிவுநீர்
கம்பம் 33-வது வார்டு ஆங்கூர்பாளையம் சாலைப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கழிவு நீரை அகற்றுவதுடன் சாக்கடை கால்வாயும் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கம்பம்.
ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் பணி
திண்டுக்கல்-பழனி சாலையில் பெரிய அய்யன்குளம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குதுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-தியாகு, பெரிய அய்யன்குளம்.
முல்லைப்பெரியாற்று கரைப்பகுதி சேதம்
கம்பத்தை அடுத்த சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் உள்ள முல்லைப்பெரியாற்றுப்படுகையின் கரைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பாசனத்துக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே கரைப்பகுதியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்தரசன், கம்பம்.
----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.