திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு நன்றி
நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வரமுடியவில்லை என்று 'தினத்தந்தி'யின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் 'தினத்தந்தி'க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். -சிவசக்தி செந்தில்ராஜன், பள்ளப்பட்டி.
மின்கம்பத்தால் விபத்து அபாயம்
கூடலூரில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட மின்கம்பம், சாலை ஓரத்தில் போடப்பட்டு உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. எனவே மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
-சிவா, கூடலூர்.
வீணாக செல்லும் குடிநீர்
நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியில் திண்டுக்கல் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுகிறது. இதனால் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் சாலையில் ஆறாக ஓடி வீணாகிறது. கோடைகாலம் நெருங்குவதால் குடிநீர் வீணாவதை தடுப்பது அவசியம். எனவே குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். -குமார், கோபால்பட்டி.
கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?
கொடைக்கானல் தாலுகா காமனூரை அடுத்த மங்களம்கொம்பில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. மேலும் கழிப்பறை மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். -வேளாங்கன்னி, மங்களம்கொம்பு.
சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகள்
போடி ரெங்கநாதபுரத்தில் மங்கம்மாள் சாலையின் ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. எனவே சாலை ஓரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- கோபிநாத், போடி.
குடிநீர் குழாய் உடைப்பு
பழனி சத்யாநகரில் தனியார் ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையில் குடிநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே குடிநீர் வீணாக செல்லாமல் தடுப்பதற்கு குழாயை சரிசெய்ய வேண்டும். லோகநாதன், பழனி.
சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடம்
கூடலூர் அருகே சாமாண்டிபுரத்தில் உள்ள ரேஷன்கடை கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது. கட்டிடத்தின் சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அச்சத்துடன் ஊழியர்கள் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே கட்டிடத்தை சரிசெய்ய வேண்டும். முருகேசன், சாமாண்டிபுரம்.
குப்பைகள் அகற்றப்படுமா?
அம்மையநாயக்கனூரில் பெருமாள் கோவில் தெருவில் நடைபாதையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகள் காற்றில் பறந்து தெருமுழுவதும் பரவி விடுகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சங்கடப்படும் நிலை ஏற்படுகிறது. அங்கு குப்பை தொட்டி வைத்து குப்பைகளை முறையாக சேகரித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள், அம்மையநாயக்கனூர்.
கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுமா?
உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. இதனால் மகப்பேறு உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கு சிலநேரம் கம்பம் அல்லது க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்க கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.பொதுமக்கள், உத்தமபாளையம்.
-----------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.