திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் நிழற்குடை வேண்டும்
பெரியகுளம் பழைய பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பெரியகுளம்.
மூடப்படாத சாக்கடை கால்வாய் பள்ளம்
திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருப்பதி, திண்டுக்கல்.
கால்வாயை தூர்வார வேண்டும்
பழனியை அடுத்த காவலப்பட்டி 5-வது வார்டு பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுவதில்லை. இதனால் வார்டு பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றும், சாக்கடை கால்வாயையும் தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், காவலப்பட்டி.
பேட்டரி கார் வசதி வேண்டும்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக நுழைவு வாயிலில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வதற்கு பேட்டரி கார் வசதியை செய்து கொடுக்க வேண்டும். இதனால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் பலன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?
-ராஜா, சேடப்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொல்லப்பட்டியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பாதசாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ரத்தினம், கொல்லப்பட்டி.
ஆபத்தான ஆழ்துளை கிணறு
போடி ஜீவாநகரில் பள்ளி அருகில் திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த பகுதியில் விளையாட வரும் குழந்தைகள் ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, போடி.
பூட்டியே கிடக்கும் நூலகம்
சின்னமனூரை அடுத்த சீப்பாலகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூலகம் உள்ளது. இந்த நூலகம் பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், புத்தக வாசிப்பாளர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-லட்சுமணன், சின்னமனூர்.
கழிப்பறை வசதி இல்லை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதேபோல் 3-வது நடைமேடையில் மரத்துண்டுகள் காய்ந்த நிலையில் பல மாதங்களாக உள்ளன. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரத்துண்டுகளை அகற்றுவதுடன் கழிப்பறை வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
-ராஜேஷ், திண்டுக்கல்.
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
கம்பம் அரசமரம் வேலப்பர் கோவில் தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், கம்பம்.
----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியிலும் பதிவு செய்யலாம்.