< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
22 Jan 2023 7:00 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

தேனி பங்களாமேடு திட்டச்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.

-குமார், தேனி.

வீணாக வெளியேறும் குடிநீர்

பெரியகுளம் அருகே அனுமார் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுமையாக தண்ணீர் நிரம்பினாலும் மின்மோட்டார் அணைக்கப்படுவதில்லை. இதனால் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவுல்ராஜ், பெரியகுளம்.

சேதமடைந்து வரும் மின்கம்பம்

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி வேதாத்திரி நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ், செட்டிநாயக்கன்பட்டி.

சிகிச்சை கிடைக்காமல் கர்ப்பிணிகள் அவதி

கம்பம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. டாக்டர்களும் குறித்த நேரத்துக்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் கர்ப்பிணிகள் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பழகன், உத்தமபாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல் வேடப்பட்டியில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை மர்மநபர்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோஜா பிரியன், வேடசந்தூர்.

வேகத்தடையால் மக்கள் பாதிப்பு

திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி அந்தோணியார் தெருவில் அவசியம் இல்லாத இடத்தில் ஒருவர் வேகத்தடை அமைத்துள்ளார். யாரிடமும் அனுமதி பெறவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வேகத்தடையை அகற்ற வேண்டும்.

-தயாநிதி, பள்ளப்பட்டி,

சாலையில் தேங்கும் குடிநீர்

திண்டுக்கல்லை அடுத்த குள்ளனம்பட்டியில், நத்தம் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் முறையாக கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, குள்ளனம்பட்டி.

சிக்னல் செயல்பட வேண்டும்

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, திண்டுக்கல்.

மேம்பாலம் அமைக்கப்படுமா?

தேனி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தினமும் காலை நேரத்தில் ரெயில்வே கேட் சுமார் ஒரு மணி நேரம் மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

-பாண்டி, தேனி.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியில் பள்ளிவாசல் ரோட்டில் சிமெண்டு தொட்டிக்குள் குடிநீர் குழாய்க்கான வால்வு உள்ளது. இந்த தொட்டியின் மூடிப்பகுதி சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனை கவனிக்காமல் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சிமெண்டு தொட்டியின் மூடியை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வாகித், உத்தமபாளையம்.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

-----------------

மேலும் செய்திகள்