< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Sep 2022 12:43 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றப்பட்டது

காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே பூவன்விளைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

குளத்தில் கழிவு நீர் கலப்பு

நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பின் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அருகிலுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வந்து கலக்கிறது. இந்த கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள குளத்தில் கலந்து மாசு அடைந்து வருகிறது. மேலும் வடிகாலில் சாக்கடை தேங்கி நின்று கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஓடையில் சாக்கடை தேங்கி நிற்காதவாறு பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-து.ஜெஸ்டஸ், பேயன்குழி.

துர்நாற்றம் வீசுகிறது

களியக்காவிளை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கட்டணம் ெகாடுத்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, கழிவறையை சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதாசிவன், பார்வதிபுரம்.

கால்வாய் ஆக்கிரமிப்பு

வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கவிளை பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல அரசு நிலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால், கால்வாய் சுருங்கி வருகிறது. அத்துடன் மழைகாலங்களில் மழைநீர் பாய்ந்து செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபின், வேங்கவிளை

பயன்படுத்த முடியாத சாய்வுதளம்

ஏ.டி.எம். மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் வந்து செல்ல வசதியாக சாய்வுதள பாதை அமைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் திரும்ப செல்கிறார்கள். எனவே, சாய்வுதளத்தை சரியாக அமைத்து மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சமியன்பிள்ளை, திட்டுவிளை.

சாலையின் அவலம்

குருந்தன்கோடு ஒன்றியம் கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலகட்டிமாங்கோடு பகுதியில் உள்ள கோவிலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நின்று வாத்துகள் மேயும் சகதிகாடாக மாறி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.முருகன், கட்டிமாங்கோடு.

மேலும் செய்திகள்