< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Aug 2022 5:39 PM GMT

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

அம்பை-பாபநாசம் மெயின் ரோடு அகஸ்தியர்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதாகவும், இதனால் சாலை சேதடைந்து காணப்படுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் அகஸ்தியர்பட்டியை சேர்ந்த முருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கு கழிவுநீர் சாலைக்கு செல்லாதவாறு கழிவுநீர் தொட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

- முருகன், அகஸ்தியர்பட்டி.

வேகத்தடை வருமா?

நெல்லை மருத்துவக்கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையின் எதிரே உள்ள சாலையில் தற்போது அமைந்துள்ள வேகத்தடை சிறிதாகவும், நுழைவுவாயிலில் இருந்து சற்று தொலைவிலும் அமைந்துள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் அங்கு வந்து செல்லும் நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- மாணிக்கவாசகம், அன்புநகர்.

குடிநீர் தொட்டி மீண்டும் பயன் தருமா?

மானூர் யூனியன் கட்டாரங்குளம் கிராமம் கீழத்தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயனடைந்து வந்தனர். ஜல்சக்தி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தபோது, இதன் பயன்பாடு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் தொட்டி மீண்டும் பயன்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- விஜயா, கட்டாரங்குளம்.

கூடுதல் பஸ் வசதி தேவை

நெல்லையில் இருந்து கோவைகுளத்துக்கு முன்பு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு பஸ்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக, மாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கோவைகுளத்துக்கு பஸ் வருகிறது. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே முன்புபோல் அனைத்து பஸ்களையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- இசக்கி, கோவைகுளம்.

* சேரன்மாதேவி சந்திப்பு பகுதியில் இருந்து நெல்லைக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்ேவார் என்று தினமும் ஏராளமானவர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். ஆனால் காலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. மேலும் சில நேரங்களில் நீண்ட நேரம் பஸ் வருவது இல்லை. இதுபோன்ற காரணங்களால் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் சேரன்மாதேவியில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

- பழனிசாமி, சேரன்மாதேவி.

சுகாதாரக்கேடு

தென்காசி மாவட்டம் எலத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எக்ஸ்பிரஸ் சிட்டி காலனியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. அதை முறையாக அகற்றாததால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அங்கு குப்பை தொட்டி வைத்து, குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- இசக்கி, எக்ஸ்பிரஸ் சிட்டி காலனி.

குடிநீர் வசதி வேண்டும்

திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து பாறைப்பட்டி இந்திரா காலனியில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இ்ங்கு குடிநீர் வசதி சரிவர இல்லை. மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாரிச்சாமி, பாறைப்பட்டி இந்திரா காலனி.

குப்பைகள் அகற்றப்படுமா?

பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி சாலையின் வடக்கு பகுதி குலசேகரபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்வார்களா?

- சந்திரன், பாவூர்சத்திரம்.

குண்டும், குழியுமான சாலை

ஆலங்குளம் மார்க்கெட் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. மேலும் அந்த சாலை நெல்லை-தென்காசி சாலையில் இணையும் இடத்திலும் மிகவும் மோசமாக உள்ளது. ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம் வழியாக சுரண்டை, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஜெயவண்ணன், குறிப்பன்குளம்.

* திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டியில் இருந்து அ.கரிசல்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-நவநீத் சிரஞ்சீவி, கலிங்கப்பட்டி.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் 3-வது தெருவில் மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடியை சேர்ந்த அழகப்பன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அங்கு தெருவிளக்குகள் சரிசெய்யப்பட்டு, இரவில் அவை ஒளிர்கின்றன. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

போக்குவரத்துக்கு இடையூறு

கோவில்பட்டி புதுரோடு கடலைக்கார தெரு முக்கில் அடிபம்பு ஒன்று பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகையால் அந்த அடிபம்பை அகற்ற அதிகரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பாலமுருகன், ேகாவில்பட்டி.

வாறுகால் வசதி வேண்டும்

கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி கணேஷ்நகரில் வாறுகால் வசதி சரிவர இல்லை. இதனால் சாலைகளில் கழிவுநீர் ஓடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் சில தெருக்களிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.

- முத்துக்குமார், மந்தித்தோப்பு.

காட்சிப்பொருளான அடிபம்பு

எட்டயபுரம் நடுவிற்பட்டி போலீஸ் லைன் தெருவில் அடிபம்பு ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள அந்த அடிம்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

- வினோத் கண்ணன், எட்டயபுரம்

சாலை சீரமைக்கப்படுமா?

பேய்க்குளத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் பேய்க்குளம் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் புளியங்குளம் வழியாக இளமால்குளம் செல்லும் சாலையும் மோசமாக உள்ளது. கருங்கடலில் பாலம் வேலை முடிந்துள்ளது. அதன் இருபுறமும் மண் சாலையாக உள்ளது. மேலும் கருங்கடலில் உள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- இம்மானுவேல், கருங்கடல்.

மேலும் செய்திகள்