திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
சாணார்பட்டி ஒன்றியம் பஞ்சம்பட்டியில் இருந்து கொழிஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஜெல்ரால்டு, வக்கம்பட்டி.
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
பழனி நகராட்சி 33-வது வார்டு வெண்மணி நகரில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அங்குள்ள பொதுக்கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சாக்கடையில் கலக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-ராஜ், பழனி.
சாலையோரத்தில் குவியும் குப்பை
திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-ஆரோக்கியசாமி, கலிக்கம்பட்டி.
பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்
கம்பம் நகராட்சி 3-வது வார்டு சங்கிலிநகரில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து ஊருக்கு சென்று பஸ் ஏறிச்செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறனர். எனவே சங்கிலிநகரில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.
-பாண்டியராஜ், கம்பம்.
துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி
பழனி இடும்பன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும்.
-மணிமாறன், பழனி.
ஆமை வேகத்தில் சாலை பணி
திண்டுக்கல் ரவுண்டு ரோட்டின் ஒருபுறம் சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சாலையின் மறுபுறத்தில் எதிர், எதிரே வாகனங்கள் வந்து செல்லும் நிலையே தற்போது வரை இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-குமார், திண்டுக்கல்.
சமூக விரோதிகளின் கூடாரமான நிழற்குடை
கடமலைக்குண்டுவை அடுத்த கருப்பையாபுரம் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயன், தங்கம்மாள்புரம்.
அரசு மருத்துவமனை முன்பு சுகாதாரக்கேடு
ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.
-கோபாலகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி.
வாய்க்கால் பாலம் சேதம்
கம்பத்தில் இருந்து வீரப்பநாயக்கன்குளம் வழியாக நாராயணத்தேவன்பட்டி செல்லும் பாதையில் உள்ள சின்ன வாய்க்கால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே வாய்க்கால் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-செல்வராணி, நாராயணத்தேவன்பட்டி.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.