திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
வேடசந்தூர் அருகே மாரம்பாடி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகர், மாரம்பாடி.
மின் விபத்து அபாயம்
உத்தமபாளையம் தாலுகா கோகிலாபுரம் ஊராட்சி கிழக்குத்தெருவில் உள்ள மின்கம்பத்தின் மீது மரக்கிளைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஆக்கிரமித்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், உத்தமபாளையம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக ஏற்கனவே அப்பகுதியில் இருந்த சாலை அகற்றப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிதாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைவாக தொடங்க வேண்டும்.
-மகமூத் இன்சமாம், திண்டுக்கல்.
பன்றிகளால் சுகாதாரக்கேடு
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் நகரின் மையப்பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளில் மூழ்கிவிட்டு தெருவிற்குள் நுழைகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.
-வேல்முருகன், ஆண்டிப்பட்டி.
சேதமடைந்த மின்கம்பம்
திண்டுக்கல்லை அடுத்த எஸ்.பாறைப்பட்டி அருகே காப்பிளியம்பட்டியில் சாலையோர மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், எஸ்.பாறைப்பட்டி.
சாலையோர பள்ளத்தை மூட வேண்டும்
ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே சாலை தரைமட்டத்தைவிட சற்று உயரமாக உள்ளது. இதனால் சாலையோரங்கள் பள்ளமாக காட்சியளிக்கிறது. இரவில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையோர பள்ளத்தை சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.
எரியாத தெருவிளக்கு
திண்டுக்கல்லை அடுத்த கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
அவதிப்படும் நோயாளிகள்
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் தாமதமாக பணிக்கு வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே டாக்டர்கள், நர்சுகள் தாமதம் இன்றி பணிக்கு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
பள்ளம், மேடான சாலை
தேனி புதிய நிலையத்தில் நுழைவு பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வேந்திரன், தேனி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கம்பம் புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் முகம் சுழித்தபடியே பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே குப்பைகளை விரைவாக அகற்ற வேண்டும்.
-பிரபு, கம்பம்.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
-------------