திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோய் பரவும் அபாயம்
திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோர சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கால்வாயில் தூர்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் தேங்கும் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குவதுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாருவதுடன், சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
-பிரசன்னா, திண்டுக்கல்.
சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம்
நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி அதன் கழிவுகள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கால்வாயின் அருகே குடிநீர் குழாயும் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-முத்துமாரி, குளத்துப்பட்டி.
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு பயணிகள் செல்ல குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும் கூட்ட நெரிசலில் சிக்கியபடி தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-பால்ராஜ், எரியோடு.
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
திண்டுக்கல்லை அடுத்த கூட்டாத்துப்பட்டி அருகே குளத்தூரில் இருந்து பாடியூர் செல்லும் சாலையில் செல்போன் கேபிள் வயர் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மணல் சாலையில் பரவி கிடக்கிறது. பணிகள் முடிந்து பள்ளம் மூடப்பட்டாலும் சாலையில் பரவிய மணல் அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற வேண்டும்.
-ஜீவா, கூட்டாத்துப்பட்டி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
தேனி பழைய பஸ் நிலையம் அருகே பெரியகுளம் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-திரவியம், தேனி.
தெரு விளக்கு வசதி வேண்டும்
நிலக்கோட்டை அருகே உள்ள பொட்டிகுளம் பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அந்த பகுதியில் தெரு விளக்கு வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கருப்பன், பொட்டிகுளம்.
சேதம் அடைந்த தார்ச்சாலை
ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு செல்லும் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், ஜம்புலிப்புத்தூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
தேனி பகவதியம்மன் கோவில் தெரு முக்கிய கடைவீதியாக திகழ்கிறது. இந்த கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. சில கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டியுள்ளதால் மக்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வம், தேனி.
குண்டும், குழியுமான சாலை
உத்தமபாளையம் கச்சேரி ரோடு. மெயின்ரோடு ஆகியவை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
--------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.