< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 July 2023 12:30 AM IST

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் தற்போது மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன், சிவகிரிப்பட்டி.

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

தேனி அல்லிநகரம் தீயணைப்பு நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாக்கடை கால்வாய் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் சாக்கடை கால்வாய் கட்டப்படவில்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி தூர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக அமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், அல்லிநகரம்.

குண்டும், குழியுமான சாலை

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப்பாலத்தில் இருந்து சொக்கு பிள்ளைபட்டி பிரிவு வரை சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்

திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளிதாஸ், திண்டுக்கல்.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

தேனி மார்க்கையன்கோட்டை காலனி பகுதியில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டப்பட்டு பல வாரங்கள் ஆகியும் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், மார்க்கையன்கோட்டை.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

வேடசந்தூரில் இருந்து மாரம்பாடி செல்லும் சாலையில் மாரம்பாடி பிரிவு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும் அருகே உள்ள சில கடைகாரர்களும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேசுராஜாங்கம், வேடசந்தூர்.

தெருவில் தேங்கும் சாக்கடை

புதுசத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருந்ததியர் காலனியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் சாக்கடை நிரம்பி தெருவில் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

-ரங்கசாமி, பொம்மநல்லூர்.

தெருவிளக்கு எரியவில்லை

பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் தெரு விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், பெரியகுளம்.

சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்

தேனி சுப்பன் தெரு திட்டசாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. மேலும் இறைச்சி கழிவுகளும் அப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, இறைச்சி கழிவுகளை சாப்பிட வரும் தெரு நாய்களாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை எரிப்பதை தடுப்பதோடு, இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கபிலன், தேனி.

வாரச்சந்தை கட்டும் பணி மந்தம்

கூடலூர் நகராட்சி அரசு விதை பண்ணை சாலையில் சந்தை திடல் பகுதியில் வாரசந்தை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுமன், கூடலூர்.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்