திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த மின்கம்பம்
செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள சின்னையாபுரம் பகுதி ராஜநகர் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்ததுடன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே விபத்து எற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
விபத்து ஏற்படும் அபாயம்
திண்டுக்கல்-பழனி ரோடு நெடுஞ்சாலை முத்தனம்பட்டி பிரிவில் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் அங்கு இரும்பு தடுப்புகளை வைக்க வேண்டும்.
-ஹரிகரன், திண்டுக்கல்.
எரியாத தெரு விளக்கு
பழனி பெரியார் சிலையில் இருந்து ரெணகாளியம்மன் கோவில் நால்ரோடு செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், பழனி.
சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்
திண்டுக்கல்-நத்தம் சாலையில் பொன்னகரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்ககடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், பொன்னகரம்.
தண்ணீர் தட்டுப்பாடு
பெரியகுளம் அரகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ஜி.கல்லுப்பட்டி.
திறக்கப்படாத அங்கன்வாடி கட்டிடம்
கடமலைக்குண்டு அருகே உள்ள தேவராஜ்நகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று வருகின்றனர். எனவே அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-ஊர் மக்கள், தேவராஜ்நகர்.
கால்வாயில் தேங்கும் கழிவுநீர்
உத்தமபாளையம் கோம்பை காலனி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-பொதுமக்கள், கோம்பை
வேகத்தடை அமைக்க வேண்டும்
திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், திண்டுக்கல்.
குண்டும், குழியுமான சாலை
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டி கேசவபுரம் கண்மாய்க்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
-பாண்டி, கம்பம்.
--------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.