திண்டுக்கல்
'தினத்தந்தி' புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி'க்கு நன்றி
சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையில் மாரியம்மன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால், குடிநீர் வினியோகம் பாதிப்பு என்று தினத்தந்தியின் புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -ஜெயசுதா, சீப்பாலக்கோட்டை.
தேங்கி நிற்கும் மழைநீர்
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையில் பெருமாள் கோவில் தெருவில் முறையான சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடியாமல் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய வேண்டும். -ஜெகன், அனுமந்தராயன்கோட்டை.
பூங்கா பராமரிக்கப்படுமா?
வேடசந்தூரில், வடமதுரை சாலையில் உள்ள அம்மா பூங்கா பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.இந்த பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜேசுராஜாங்கம், வேடசந்தூர்.
தெருநாய்கள் தொல்லை
ஆத்தூர் சவேரியார் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் தனியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி பகலில் கூட குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கு பயமாக இருக்கிறது. எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெர்ஜினியா, ஆத்தூர்.
சாலை பணி மந்தம்
சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அழகாபுரி எனும் அப்பிபட்டியில் சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும். -ரவி, அப்பிபட்டி.
சாக்கடை கால்வாய் தேவை
கன்னிவாடியை அடுத்த ஸ்ரீராமபுரம் பேரூராட்சி வெள்ளமடத்துப்பட்டியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க கழிவுநீரை அகற்றி தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும். -ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.
விபத்து ஏற்படும் அபாயம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுசத்திரம் கம்பளிநாயக்கன்பட்டியில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள் சாலையில் சிதறி விழுகின்றன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
தெருவில் ஓடும் கழிவுநீர்
திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார்தெரு பகுதியில் கருப்பணசாமி கோவில் தெருவில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. இதனால் மக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும்.- தயாநிதி, பள்ளப்பட்டி.
சாலையில் அபாய பள்ளம்
திண்டுக்கல் காந்திஜிநகரில் மேம்பாலத்தின் அருகே ஜி.டி.என். சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. சாரல் மழை பெய்தால் கூட குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே விபத்தை தடுக்க பள்ளத்தை சரிசெய்ய வேண்டும். கணேசன், திண்டுக்கல்.
தெரு விளக்குகள் சரி செய்யப்படுமா?
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 8-வது வார்டில் பைரவசாமி கோவில் தெருவில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இரவில் அந்த வழியாக செல்வதற்கு பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். இந்த தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். -பொதுமக்கள், மேலசொக்கநாதபுரம்.
--------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.