புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை மடத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், குரும்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம சாலையில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பத்திலிருந்து செல்கின்ற மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் செல்கிறது. இந்த கிராம மக்கள் இந்த பிரதான சாலை வழியாக தங்கள் ஊருக்கு செல்வதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன் இந்த மின்கம்பத்தை புதுப்பித்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குரும்பூண்டி
அங்காடி மையம் சரி செய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்ட, வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட இச்சடி கிராமத்தில் அங்காடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மைய கட்டிட்டத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கார்த்திக், இச்சடி.
புதர்மண்டி கிடக்கும் குளம்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி அரசு தொடக்க பள்ளி அருகே வேளான் குளம் உள்ளது. இந்த குளம் தற்போது புதர்மண்டி பாசி படர்ந்தும் கிடக்கிறது. இதனால் குளத்து நீர் மாசமடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி
மின் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ராயவரம் மற்றும் செங்கீரை பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி மின்வினியோகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், குழந்தைகள் தூக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், செங்கீரை