கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
அரவக்குறிச்சி தாராபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதினால், பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி.
வாகனம் ஓட்டும் சிறுவர்கள்
சமீப காலமாக அரவக்குறிச்சி நகரப் பகுதியில் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிக அளவில் ஓட்டி செல்கின்றனர். மேலும் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்கின்றனர். இதனால் அரவக்குறிச்சி நகரப்பகுதியில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் அச்சத்துடனே செல்கின்றனர். மோட்டார் சைக்கிள்களில் செல்லும் சிறுவர்கள், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செல்கிறார்கள். பொதுமக்கள் நிறுத்தி தட்டி கேட்டால் அவர்களை மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், அரவக்குறிச்சி.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், காகிதபுரம், டி.என்.பிஎல் சாலையிலிருந்து மூலிமங்கலம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபு, காகிதபுரம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், மாங்காசோளிபாளையம், ரெயில் கேட் அருகே குடிநீர் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிதாக ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
பொதுமக்கள், மாங்காசோளிபாளையம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கரூர் பகுதியில் இருந்து வாங்கப்பாளையம், வெங்கமேடு, இனாம்கரூர், மண்மங்கலம், சேலம் பைபாஸ் சாலை மற்றும் அரசு காலனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகிறது. இதில் வெங்கமேடு மேம்பால பகுதிளை விட்டு இறங்கியதும் சாலை ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகில் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகாலில் இருந்து கசிவு ஏற்பட்டு டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் காரணமாக இப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அப்பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. இதனால் அதிகளவிலான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இவர்கள் இப்பகுதியில் கடந்து செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வாங்கப்பாளையம்.