புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் கடைவீதி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை
வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காலாடிபட்டி சத்திரம் என்ற ஊர் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பலஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. அதுமட்டுமின்றி எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்ற வண்ணம் உள்ளது. இதனால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி
பழுதடைந்து வரும் மின்சாதன பொருட்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குறைவான மின்சாரம் வருகிறது. இதனால் அடிக்கடி மின்சாத பொருட்கள் பழுதடைந்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எ னஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருப்புனவாசல்.
எரியாத தெருவிளக்குகள்
புதுக்கோட்டை கணபதி நகரில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தெருவிளக்கு சுவிட் பாதுகாப்பு அற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கிருத்திகா, புதுக்கோட்டை.
குடிநீர் பற்றாக்குறை
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரையப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் காவிரி ஆற்று குடிநீர் கலங்காக வினியோகம் செய்யப்படுவதால் அதனை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜ், முள்ளூர்.