கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் பசுபதிபாளையம் ஊருக்குள் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் மாலைப்போல் குவிந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவராஜ், பசுபதிபாளையம்.
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி கட்டிடம்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. பள்ளிக்கூடத்தை சுற்றி அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள்ஆகிய பள்ளிக்குள் வந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இலக்கியா, கட்டிப்பாளையம்
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் தண்ணீர்
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் வழியாக உபரிநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் வழியாக கவுண்டன்புதூர் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் செல்கிறது. இந்நிலையில் கால்வாய் முழுவதும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் முத்தனூரில் தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அப்போது தார் சாலையில் இருந்து அள்ளப்பட்ட மண்ணை குளத்தில் போட்டதால் ஏராளமான மண் குவியல் குவியளாக உள்ளது. இந்நிலையில் பாலம் கட்டி முடிந்துவிட்ட நிலையில் குளத்தில் கொட்டப்பட்ட மண் அகற்றப்பட்டது. இருப்பினும் முறையாக மண்ணை அள்ளி தண்ணீர் வெளியேறும் வகையில் பறிக்கப்படாததால் தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் நெடுகிலும் தண்ணீர் தேங்கி அருகாமையில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் போடப்பட்டுள்ள மண்ணை அகற்றி அந்த குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
லோகேஷ், முத்தனூர்,
சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகள்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியிலிருந்து லாரிகளில் செயற்கை மணல், கற்கள், ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக் கிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் போதும், இறக்கிவிட்டு வரும்போதும் புன்னம் சத்திரம் பகுதியில் சாலையோரத்தில் லாரிகளை வழி நெடுவிலும் நிறுத்திவிட்டு மணிக்கணக்கில் வெளியில் சென்று விட்டு வருகின்றனர். இதனால் இந்த வழியாக ஏராளமான தனியார் பஸ் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் என சென்று வருகின்றன. சாலை ஓரத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்தேஸ்வரன், புன்னம்சத்திரம்
ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மேம்பாலத்தின் கீழ் உள்ள புதுரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேஷ்குமார், வேலாயுதம்பாளையம்