< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 Jun 2023 6:45 PM GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா நவ்வலடியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து டைல்ஸ் கற்கள் உடைந்து இருப்பதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு பயணிகள் நிழற்கூடத்தில் புதிய டைல்ஸ் கற்கள் பதித்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் தொல்லை

நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அனைத்து தெருக்களிலும் சுற்றி திரியும் தெருநாய்கள், அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மணிகண்டன், பாரதியார் நகர்.

சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

வீரவநல்லூர் அருகே காருகுறிச்சி புதுக்குடியில் உள்ள கன்னடியன் கால்வாய் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தும், தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் ஏராளமான விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-மாரிச்செல்வம், புதுக்குடி.

சுகாதாரக்கேடு

நாங்குநேரி சன்னதி தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளமாக காட்சியளிப்பதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-முருகன், நாங்குநேரி.

பழுதடைந்த அடிபம்பு

பாளையங்கோட்டை யூனியன் செங்குளம் பஞ்சாயத்து கீழ ஓமநல்லூரில் சாலையோரம் மயானம் உள்ளது. இங்குள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு இறுதிச்சடங்கு நடத்த செல்கிறவர்கள் தண்ணீர் வசதியின்றி சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்பை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-தேவராஜ், செங்குளம்.

புகார்பெட்டி செய்தி எதிரொலி;

புதிய மின்கம்பம் அமைப்பு

தூத்துக்குடி மாவட்டம் மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து நா.முத்தையாபுரத்தில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கவுரிசங்கர் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து காமராஜ்நகர் மேற்கு 3-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பெயர்ந்து ஒயரில் தொங்கியவாறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-ராமர், காமராஜ்நகர்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

திருச்செந்தூர் பால்பண்ணை தெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க பெறாததால் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

தெருவில் குவிந்த குப்பைகள்

காயல்பட்டினம் ஆசாத் தெருவில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அவை காற்றில் பறந்து, தெரு முழுவதும் குவிந்து குப்பைக்கூளங்களாக காட்சி அளிக்கிறது. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-தீன், காயல்பட்டினம்.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் எதிரில் இடதுபுறம் செல்லும் சாலையில் மின்மாற்றி அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

ஆபத்தான கழிவுநீர் தொட்டி

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் தெற்கு மடத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான கழிவுநீர் தொட்டியின் மூடியை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ராஜசேகர், புங்கம்பட்டி.

சேதமடைந்த சாலை, வாறுகால்

ஆலங்குளம் பேரூராட்சி மங்கம்மாள் தெருவில் சாலை மற்றும் வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் நிரம்பி, தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சேதமடைந்த சாலை, வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பிரபாகர ராஜா, ஆலங்குளம்.

சுகாதாரக்கேடு

கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கேளையாபிள்ளையூர் தெற்கு தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்ேகடு ஏற்படுகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கடையநல்லூர் நகராட்சி 32-வது வார்டு நடுத்தெருவில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி வாறுகால் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. ஆனால் சாலை அமைக்கும் பணியானது 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-கண்ணன், கடையநல்லூர்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடையம் மெயின் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

மேலும் செய்திகள்