< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 May 2023 1:30 AM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும் குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் களக்காடு யூனியன் பத்மனேரி பாலத்தில் இருந்து பிளவுக்கல் இசக்கியம்மன் கோவில் வரையிலான சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவதோடு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டுகிறேன்.

-கணேசன், பத்மனேரி.

* வடக்கன்குளம் பஸ் நிலையத்தின் முன்புள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையை பராமரித்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சாய் சுரேஷ், வடக்கன்குளம்.

தாமதமாகும் குடிநீர் வினியோகம்

நெல்லை தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம், புதுக்காலனி தெருவில் குடிநீர் வசதி இல்லை. வீடுகள் மற்றும் வீதிகளில் தனியாக குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் குழாய்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோடை காலத்தில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரேஷ்மா, ராஜவல்லிபுரம்.

முழுமை அடையாத சாலை பணி

முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு புது காலனியில் உள்ள 6 தெருக்களில் 4-ல் பேவர்பிளாக் சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 தெருக்களில் பேவர்பிளாக் சாலை போடப்படாமல் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியாக உள்ளதோடு சாலை முழுவதும் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் விடுபட்ட இரண்டு தெருக்களில் புதிய பேவர்பிளாக் சாலைகள் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-ஆதிமூலம், முக்கூடல்.

அடிப்படை வசதிகள் தேவை

அம்பை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். குடிநீர் வரும் குழாய்கள் அடைக்கப்பட்டும், வளாகத்திற்குள் உள்ள குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமலும் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. நாய் மற்றும் கால்நடைகள் தங்கு தடையின்றி ஆஸ்பத்திரிக்குள் சுற்றி வருவதால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-பாலசுப்பிரமணியன். காத்தபுரம்.

சாலையில் வீணாகும் குடிநீர்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு-கலியாவூர் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை பழுதாவதோடு, வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-தம்பான், வல்லநாடு.

தொலைதூர பஸ்களும் நின்று செல்லுமா?

குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்த வழித்தடத்தில் வரும் தொலைதூர பஸ்கள், அண்ணாசிலை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். எனவே போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு உதவிட வேண்டுகிறேன்.

-ஜேம்சன், குலசேகரன்பட்டினம்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

விளாத்திகுளம் யூனியன் கழுகாசலபுரம் ஊராட்சி செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாலமுருகன். கோவில்பட்டி.

பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி

காயாமொழி ஊராட்சி ராமலிங்கபுரம் கிராமத்தில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால் தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுந்தரபாபு, காயாமொழி.

பழுதடைந்த அரசு மருத்துவமனை கட்டிடம்

குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் பராமரிப்பின்றி இடிந்த நிலையில் உள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அனைவரும் அச்சத்துடனேயே வந்து செல்கிறார்கள். விபரீதம் ஏதேனும் நேரிடும் முன்பு அரசு உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மருத்துவமனை கட்டிடத்தை புதுப்பித்திட கேட்டு கொள்கிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

பராமரிப்பு இல்லாத கிணறு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிதநல்லூர் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தின் வடபுறம் உள்ள விநாயகர் கோவிலின் அருகில் அமைந்துள்ள நந்தவன கிணறு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த கிணற்றை சுற்றி மக்களுக்கு இடையூறாக சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது. மேலும் கிணற்றை சுற்றிலும் சேதமடைந்து காணப்படும் சுற்றுச்சுவர் மற்றும் நடைமேடையையும் செப்பனிட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

-சுப்பிரமணியன், கீழநீலிதநல்லூர்.

சுகாதாரமற்ற குடிநீர்

வாசுதேவநல்லூர் அருகில் உள்ள வெள்ளானைக்கோட்டை கிராமத்தில் ஆலமரத்தடி பஸ் நிறுத்தம் அருகில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இதிலிருந்துதான் பல கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. இந்த குடிநீர் தொட்டி முறையாக சுத்தப்படுத்தப்படாததால் குடிநீர் சேறும் சகதியுமாக உள்ளது. சுகாதாரமற்ற இந்த குடிநீரை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். தொட்டியை முறையாக சுத்தப்படுத்தி குடிநீர் வழங்க கேட்டு கொள்கிறேன்.

-கலியபெருமாள், வெள்ளானைக்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் ெரயில் நிலையம் அருகே ராஜீவ் காந்தி காலனி தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருக்குமரன், கடையம்.

* சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பவுண்டு தொழு தெருவில் சத்துணவு கூடத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. விபத்து ஏதும் நேரிடுவதற்கு முன்பாக இதனை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-கருப்பையா, சிவகிரி.

குண்டும் குழியுமான சாலை

வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் உபயோகப்படுத்தும் ஊத்துமலை- சுரண்டை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சாலையை செப்பனிட கேட்டு கொள்கிறேன்.

-நிவின், ஊத்துமலை.

மேலும் செய்திகள்