அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சில லாரிகளில் வரம்புக்கு மீறி அதிக பாரத்துடன் 24 மணி நேரமும் இயங்குவதால் சாலைகளும் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வாகன தணிக்கை செய்யும், வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராஜா, மீன்சுருட்டி.
குரங்குகள் தொல்லை
அரியலூர் பூக்காரத்தெரு மற்றும் நகர பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன், அரியலூர்.
குடிநீர் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் பெரியதத்தூர் கிராமம் கிழக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக இப்பகுதியில் பொது குடிநீர் குழாய் இல்லை. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் பக்கத்து தெருக்குள் சென்று நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் அங்கு குடுடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரியதத்தூர்.
குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.