புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்
புதுக்கோட்டை நகருக்குள் பழனியப்பா முக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி வரக்கூடிய மேல ராஜ வீதியில் வாகனப்போக்குவரத்து அதிகம் காணப்படும். இதேபோல பழனியப்பா முக்கம் பகுதியில் திருச்சி, தஞ்சாவூா் மார்க்கத்தில் இருந்து வரக்கூடிய பஸ்களும் வரும். இந்த நிலையில் பழனியப்பா முக்கத்தில் டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் போது சாலையின் குறுக்கே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. நடுவழியில் பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகுகிறது. இதனை போக்க பழனியப்பாக முக்கத்தில் பஸ்கள் முறையாக நிறுத்துமிடத்தில் நிறுத்த போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
மின் விளக்கு எரிவதில்லை
புதுக்கோட்டை நகர்மன்றம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் பஸ் நிறுத்தம் சில நேரங்களில் இருள் மூழ்கி காணப்படுகிறது. இதனால் இருளிலே பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியது உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டி கடைகள், வேன்கள் மூலம் வியாபாரம் போன்றவை நடைபெறுவதால் பஸ்கள் நிறுத்தி இயக்கப்படுவதிலும், பயணிகள் பஸ்சில் ஏறி, இறங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
பன்றிகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி, திருநகர், எஸ்.கே.நகர், ஈட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேட்டுப்பட்டி
குரங்குகளால் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே தினந்தோறும் காலையும், மாலையும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து திரிகின்றன. இவை அனைத்தும் வீட்டில் உள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சந்தைப்பேட்டை.
விபத்தில் சிக்கும் வாகனங்கள்
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ரெயில் சென்ற பிறகு கேட் திறந்தவுடன் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் முந்தியடித்து கொண்டு செல்கிறது. இதனால் வாகனங்கள் நெரிசல் மற்றும் நெரிசலில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவப்பூர்.