கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையை சீரமைக்க கோரிக்கை
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஜவகர்பஜார், மார்க்கெட் வழியாக 5 ரோடு செல்லும் சாலையில் கருப்பாயி கோவில் தெரு உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. மேலும் ஜவகர்பஜாரில் இருந்து அமராவதி ஆறு, பசுபதிபாளையம், ஐந்துரோடு, பாலம்பாள்புரம், அரசு காலனி, வாங்கல், நெரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த கருப்பாயி கோவில் தெரு வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கருப்பாயி கோவில் தெரு சாலையில் நடுவில் பாதாள சாக்கடை பள்ளம் ஏற்பட்டது. இந்த பாதாள சாக்கடை பள்ளத்தை சரிசெய்யும் வகையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே கருப்பாயி கோவில் தெரு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கரூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர் தெரு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையோரத்தில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரிசெய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.
கால்நடைகளால் தொல்லை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள திண்டுக்கல் ரோடு, கரூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகி்ன்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரவக்குறிச்சி.
ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் குளத்து பகுதியில் உள்ள 10 மின்கம்பங்களும்,நாட்டார்கோவில்பட்டி பகுதியில் உள்ள 5 மின்கம்பங்களும் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது. இதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கூடலூர்.
தெருநாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், காவல்காரன்பட்டி கடைவீதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காவல்காரன்பட்டி