தென்காசி
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதாரக்கேடு
நெல்லை மாவட்டம் களக்காடு பழைய பஸ் நிலையம், கோவில்பத்து, சிவந்தி ஆதித்தனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-வில்சன், கோவில்பத்து.
தெருநாய்கள் தொல்லை
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஸ்ரீநாராயணநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் கடித்து குதறுகின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜாஸ் ஹாரிஸ், கே.டி.சி.நகர்.
வாறுகாலில் அடைப்பு
நெல்லை தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன்புள்ள வாறுகாலில் குப்பைக்கூளங்கள் குவிந்துள்ளன. இதனால் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-கயிலை கண்ணன், நெல்லை.
வேகத்தடை அவசியம்
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு பால் பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் புதிய சாலை அமைத்தபோது, அங்கிருந்த வேகத்தடையை அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் அருகில் உள்ள கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளும், பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே அங்கு மீண்டும் வேகத்தடை அமைப்பார்களா?
-கண்ணன், டவுன்.
அடிப்படை வசதிகள் தேவை
திசையன்விளை பேரூராட்சி 5-வது வார்டில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு அடிப்படை வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-அமலதாஸ், திசையன்விளை.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வாறுகாலுக்குள் செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-ராம்நாத், குலசேகரநத்தம்.
சேதமடைந்த மின்கம்பம்
கழுகுமலை விநாயகர் காலனி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கம்பத்தின் உச்சிப்பகுதி முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-மணி, கழுகுமலை.
* கோவில்பட்டி புது கிராமம் வடக்கு பகுதி 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்தில் மின்விளக்கு பெயர்ந்து அந்தரத்தில் ஒயரில் தொங்குகிறது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
ஆபத்தான மரம்
திருச்செந்தூரில் இருந்து நா.முத்தையாபுரம் வழியாக உடன்குடி செல்லும் சாலையில் மறையன்விளை 2-ம் வளைவு பகுதியில் சாலையோரம் உள்ள பனைமரம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்பரிதி, திருச்செந்தூர்.
சாலை பணிகள் விரைவுபெறுமா?
கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெரு, அண்ணா புது தெரு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி சீரமைத்து ஜல்லிக்கற்களை பரப்பினர். பின்னர் பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராஜ், கழுகுமலை.
போக்குவரத்து நெருக்கடி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி மெயின் பஜாரில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் கடந்து செல்வதற்கு நீண்ட நேரமாவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
வேகத்தடை தேவை
செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் வம்பளந்தான் முக்கு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
பாவூர்சத்திரம் அரசு தினசரி சந்தை வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பராமரிப்பற்று பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறந்து முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சந்திரன், பாவூர்சத்திரம்.
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை
கடையம் அருகே வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று- வடமலைப்பட்டி சாலையில் சிலர் தங்களது வீடுகளின் அருகில் வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே முறைகேடாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, வடமலைப்பட்டி.
சிதிலம் அடைந்த கோவில் சீரமைக்கப்படுமா?
ஆழ்வார்குறிச்சியில் பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பராமரிப்பற்று சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது. கோவில் கட்டிடத்தில் ஆங்காங்கே மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே கோவிலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-சீனிவாசன், செங்கோட்டை.