தென்காசி
தினத்தந்தி புகார் பெட்டி
|‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலத்தில் தடுப்புச்சுவர் அவசியம்
நெல்லை மேலப்பாளையம்- டவுன் சாலையில் நத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் மற்றும் மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-ஜெயினுலாப்தீன், நெல்லை.
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
அம்பையில் இருந்து கடையம், சுரண்டை, கடையநல்லூர் வழியாக புளியங்குடிக்கு தினமும் காலை, மாலையில் இயக்கப்பட்ட அரசு பஸ் (வழித்தட எண்:-113 பி) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-முருகய்யா, அம்பை.
பொதுமக்களுக்கு இடையூறான டாஸ்மாக் கடை
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. அந்த வழியாக பெண்கள், மாணவிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடையை இடமாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-முத்தையா, பாளையங்கோட்டை.
வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்குள்ள ஏராளமான வேகத்தடைகளிலும் வெள்ளைநிற வர்ணம் பூசப்படாததால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து, வேகத்தடைகளில் வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-சாகுல் ஹமீது, மேலப்பாளையம்.
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
நெல்லை புதிய பஸ் நிலைய நுைழவுவாயில் எதிரில் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஆறுமுகம், பாளையங்கோட்டை.
* தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம், கேம்பலாபாத், மணல்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-வருண்குமார், பால்குளம்.
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை- கூட்டாம்புளி சாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் திறக்கப்படாமல் உள்ளதாக ராமன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து புதிய நூலகம் திறக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
மண்ணில் புதைந்த அடிபம்பு
கோவில்பட்டி இலுப்யைூரணி பஞ்சாயத்து மறவர் காலனி விவேகானந்தர் தெரு மற்றும் கோவில்பட்டி கடலையூர் ரோடு பூரண அம்மாள் காலனி நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகில் உள்ள அடிபம்புகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இதனால் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அடிபம்புகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
சாத்தான்குளம் அருகே முதலூர்- பொத்தகாலன்விளை சாலையில் உள்ள புதூர் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-பாண்டியன், புதூர்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரம் புளியங்காட்டு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-ராஜலிங்கம், இலங்கநாதபுரம்.
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி மாவட்டம் கடையம் மெயின் பஜாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் காலனி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் நிழற்குடைக்குள் செல்லாமல் பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் நின்றவாறு பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-கணேசன், கீழக்கலங்கல்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
கடையநல்லூர் நகராட்சி 1-வது வார்டு குமந்தாபுரம் 8-வது தெருவில் சாலை, தெருவிளக்கு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-முத்துசாமி, கடையநல்லூர்.
எலும்புக்கூடான மின்கம்பம்
திருவேங்கடம் தாலுகா செவல்குளம் பஞ்சாயத்து கோபாலகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மேலும் வளைந்த நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஆனந்தகுமார், செவல்குளம்.
சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடனாநதியில் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் மாசடைகிறது. எனவே ஆற்றில் அடர்ந்து வளர்ந்த சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.