புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2 டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒலியமங்கலத்தில் இருந்து காயாம்பட்டி வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது சாலை சரி செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை காயம்பட்டிக்கு பஸ் வரவில்லை. இதனால் காயம்பட்டியில் இருந்து ஒலியமங்கலம், சடையம்பட்டிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் நடை பயணமாகவும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். எனவே காயாம்பட்டி வழியாக கொடும்பப்பட்டி வரை மீண்டும் டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணப்பன், காயாம்பட்டி
குப்பைகளால் சுகாதார கேடு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தீத்தான்விடுதி ஊராட்சியை சேர்ந்த சுக்கிரன்விடுதி கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருவோணம் சாலையில் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் இருந்து சாப்பிட்ட இலைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் இந்த குப்பை கழிவுகளால் சுகாதாரக்கேடு உருவாகி கிராம மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் மண்டப கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதுமாதவன், சுக்கிரன்விடுதி.
அதிக பராம் ஏற்றி செல்லும் லாரியால் ஆபத்து
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு - ஆவணம் கைகாட்டி நெடுஞ்சாலை பகுதி வழியாக அளவுக்கு அதிகமாக தேங்காய் உரி மட்டைகளை லாரிகளில் அதிகம் ஏற்றி செல்கின்றனர். சில நேரங்களில் அந்த மட்டைகளில் மேல செல்லும் மரங்களில் உரசி கீழே விழுகிறது. இதனால் பின்னால் வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகாடு.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து பனசக்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வடகாடு
கால்நடை மருத்துவமனை அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே மேலத்தானியம் உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, எம்.உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், இடையம்பட்டி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு,கோழி,நாய்கள் என அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட மாடு,ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே கால்நடை -வளர்பவர்களின் கஷ்டத்தை போக்கவும் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் மேலத்தானியத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், காரையூர்.