< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 April 2023 12:15 AM IST

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பருத்திப்பாடு பஞ்சாயத்து நெல்லைநகர் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. எனவே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை திறந்து மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

- முத்துக்குமார், நெல்லைநகர்.

* மானூர் தாலுகா வாகைக்குளம் பஞ்சாயத்து தெற்கு வாகைக்குளம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனாலும் பல ஆண்டுகள் ஆகியும் திறப்பு விழா காணாததால் பயன்பாடற்று உள்ளது. எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சரவணன், தெற்கு வாகைக்குளம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

நெல்லை வண்ணார்பேட்டை 10-வது வார்டு வடக்கு தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.

-சாம், வண்ணார்பேட்டை.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

களக்காடு அருகே பத்மனேரி வடக்கு பச்சையாற்று பாலத்தில் இருந்து முக்கூடலிங்க சாஸ்தா கோவில் வரையிலும் ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்படுவதுடன் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-கணேசன், பத்மனேரி.

மின்மோட்டார் பழுது

திசையன்விளை பேரூராட்சி 9-வது வார்டு வாகையடி தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மோட்டார் பழுதை சரிசெய்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

- அல்பர்ட், திசையன்விளை.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே திருவரங்கநேரி- செட்டிகுளம் சாலையில் உள்ள மின்மாற்றியின் இரு மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அன்றோ ஆடம்ஸ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பங்களுடன் மின்மாற்றியை அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

புதர்மண்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்

விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பொதுமக்களுக்கு மருத்துவ பணியாளர்கள் மருந்து மாத்திரைகளை வழங்குகின்றனர். எனவே சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-இந்திரன் மஞ்சுநாதன், மார்த்தாண்டம்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

கோவில்பட்டியில் இருந்து இலுப்பையூரணிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மாரியப்பன், கோவில்பட்டி.

* சாயர்புரத்தில் இருந்து வாகைகுளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஆகையால் சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரங்கராஜன், நெல்லை.

வாறுகால் கான்கிரீட் மூடி சேதம்

காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் சாலையோரம் வாறுகால் மீது கான்கிரீட் மூடிகள் அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகனம் சென்றதில் கான்கிரீட் மூடியில் துவாரம் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் தவறி விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த அந்த கான்கிரீட் மூடியை சீரமைக்க வேண்டும்.

-சண்முகவேல், காயல்பட்டினம்.

சுகாதாரக்கேடு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை 5-வது வார்டு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, போலீஸ் நிலையம் எதிர்ப்புறம் உள்ள தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருவில் குளம் போன்று தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மனோஜ்குமார், ஊத்துமலை.

உயர்கோபுர மின்விளக்கு ஒளிருமா?

செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

குண்டும் குழியுமான சாலை

ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

-சிவா, ஆழ்வார்குறிச்சி.

* சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பெரியசாமிபுரத்தில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி விட்டது. ஆங்காங்கே ராட்ச பள்ளங்களாகவும் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-மதுசூதனன், பெரியசாமிபுரம்.

தாழ்வான படிக்கட்டுகள் தேவை

கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் கடனாநதியில் குறைந்தளவே தண்ணீர் ஓடுவதால், அங்குள்ள படித்துறையில் இறங்கி குளிப்பதற்கு முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே படித்துறையில் முதியவர்கள் இறங்கி குளிக்கும் வகையில், படிக்கட்டுகளை தாழ்வாக அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

மேலும் செய்திகள்