< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 March 2023 12:12 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம்

கரூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவலம்

அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் அருகே சீத்தப்பட்டி காலனி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ரோடுகள் உள்ளது. இரண்டு ரோடுகளுக்கும் நடுப்பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இப்பகுதியில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுவது மட்டுமில்லாமல் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சீத்தப்பட்டி காலனி.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், வடசேரியில் புழுதேரி-திருச்சி செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடசேரி.

புதிய சாலை அமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தாயனூர் வரை புதிய, பழைய கட்டளை மேட்டுவாய்கால் இனுங்கூர் வழியாக செல்கிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இனுங்கூரில் இருந்து நச்சலூர் பகுதிக்கு சென்று வருவதற்கு வாய்க்கால் நடுக்கரையில் பல வருடங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் நச்சலூரில் இருந்து இனுங்கூருக்கு சென்று வருகின்றன. இந்த தார்சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.

பொதுமக்கள், இனுங்கூர்.

தெருநாய்கள் தொல்லை

கரூர் நகரப்பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடிக்க வருகிறது. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள்,கரூர்.

மேலும் செய்திகள்