< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 March 2023 12:20 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரசு பஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுமா?

புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி, ரெகுநாதபுரம் வழியாக கிளாங்காட்டிற்கு இயக்கப்படும் அரசு பஸ் புதுக்கோட்டை விடுதி கிராமத்திற்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக காலை நேரத்தில் மட்டுமே அரசு பஸ் புதுக்கோட்டை விடுதிக்கு வந்து செல்கிறது. மற்ற நேரங்களில் காடம்பட்டி முக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கிளாங்காட்டிற்கு இயக்கப்படும் அரசு பஸ்சை வழித்தடம் மாறாமல் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுக்கோட்டை விடுதி.

செயல்படாத ஏ.டி.எம். மையம்

கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கடந்த 20 நாட்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் பணம் போடுவது, எடுப்பது போன்ற பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பணம் எடுக்க வங்கிகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ஏ.டி.எம். மையம் பழுது இன்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் சரகம், மூட்டாம்பட்டி ஊராட்சி சம்பா ஊரணி 4.18 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த ஊரணியை ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. எனவே ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை சீர்செய்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்றாண்டார் கோவில்.

93620 35007 (படம் உண்டு)

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

இலுப்பூர் தாலுகா, மலைக்குடிபட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பொதுமக்களின் தேவைக்கு பயன்படாமல் உள்ளது. அதனை சரி செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாசண்முகசுந்தரம், மலைக்குடிப்பட்டி.

அடிப்படை வசதிகள் வேண்டும்

அறந்தாங்கி தாலுகா, சிலட்டூர் ஊராட்சி, கொல்லன் வயல்ரோடு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மகேந்திரன், கொல்லன் வயல்ரோடு.

மேலும் செய்திகள்