பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாயன கொட்டகை அமைக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சிறுவயலூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாயான கொட்டகை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தமிழக அரசு மாயான கொட்டகை அமைக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடு செய்யவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக மாயான கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பழைய விராலிப்பட்டி.
குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசி்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது எசனை-அம்மாபாளையம் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடந்து வருவதால் கடந்த ஒரு மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக லாரி மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், எசனை.
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருப்புறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், செட்டிக்குளம்.
குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்
பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் தற்போது மலை போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
பொதுமக்களுக்கு இடையூறு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் வ. கீரனூர் கிராமத்தில் தெருக்களில் தினமும் ஏராளமானவர்கள் கூடி உற்கார்ந்து கொண்டு பணம் வைத்து சூதாடி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வ.கீரனூர்.