அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காட்சி பொருளாக மாறிய மின் விளக்குகள் பயன்பாட்டிற்கு வருமா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மீன்சுருட்டி பகுதியில் இருந்து நெல்லித்தோப்பு கிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருட்டாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காட்சி பொருளாக உள்ள மின்கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மீன்சுருட்டி.
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள செம்மண் சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மழவராயநல்லூர்.
விபத்தை தடுக்க சாலை விரிவுப்படுத்தபடுமா?
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை சாலை அகலப்படுத்தாமல் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகலான சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ், குருவாடி.
சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை
அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் வட்டம், பட்டணங்குறிச்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், பட்டணங்குறிச்சி.
குடிநீர் இல்லாமல் அவதி
அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமம் மெயின் சாலையில் சேவை மையம் உள்ளது. இந்த மையத்தின் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சரியாக வினியோகம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வெவ்வேறு இடங்களுக்கு குடிநீருக்காக பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், உத்திரக்குடி