அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குரங்குகள் தொல்லை
அரியலூர் நகர பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இங்குள்ள வீடுகளில் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன், அரியலூர்.
வாய்க்கால் சுத்தம் செய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அண்ணாநகர் தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சுமார் 3 மாதமாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
ராஜீவ்காந்தி, நாகமங்கலம்.
டவுன் பஸ் இயக்க கோரிக்கை
அரியலூர் மாவட்டம், கோட்டியால் கிராம பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தினமும் கல்லூரி செல்வதற்காக அவர்களை தா.பழூர் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் பஸ்சில் அனுப்பி வைக்கின்றனா். இதனால் எரிபொருள் செலவு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே கும்பகோணம் முதல் சுத்தமல்லி வரை தா.பழூர் வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொதுமக்கள், கோட்டியால்.