கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
குளித்தலை நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் இரவு நேரங்களில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளையும் கடிக்க பாய்கின்றன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை.
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, ஆவாரங்காட்டுபுத்தூர் பகுதியில் சாலைகள் அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் சாலைகள் போடப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த சாலையை ஜல்லிக்கற்களை போட்டு சீரமைத்து தற்சமயம் வேகத்தடையும் அமைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், ஆவாரங்காட்டுபுத்தூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரசுகாலனி.
தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பி
கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி அய்யம்பாளையம் காலனி பகுதி அருகே 2 மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பியானது மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் உயரத்தில் செல்கிறது. கரூர்-வெள்ளியணை சாலை ஓரத்தில் செல்லும் இந்த மின்கம்பியில் வாகனங்கள் கவனக்குறைவால் மோதினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பழனிச்சாமி, கல்லுமடை.
பஸ்கள் இயக்க கோரிக்கை
கரூர் மாவட்டம் வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில்,கொங்கு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ்களில் இயக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து வடுகபட்டி, நல்லிக்கோவில், கொங்கு நகர் வழியாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வடுகபட்டி.