< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 March 2023 11:56 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கடிகாரம் செயல்படுமா?

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள கடிகாரமானது சரியான நேரத்தை காட்டுவதில்லை. இதனால் கைக்கடிகாரம், செல்போன் இல்லாத பலர் நேரம் பார்க்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே, நிர்வாகத்தின் அதிகாரிகள் இந்த கடிகாரம் சரியான நேரம் காட்டுவதை கவனிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சார்லஸ், புத்தூர்

கலங்கலாக வரும் குடிநீர்

முசிறி நகராட்சிக்கு உள்பட்ட துறையூர் திருமுருகன்நகர், பாரதிதெரு போன்ற பகுதிகளில் நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முசிறி.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருவெறும்பூர் தாலுகா, தெற்கு காட்டூர் கமலா நேரு நகர், 3 வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் மட்டும் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணி, காட்டூர்.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

ஸ்ரீரங்கம் தாலுகா, இனாம்குளத்தூர் ஊராட்சி, வடசேரி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துக்கிடக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாகரெத்தினம், வடசேரி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

லால்குடி தாலுகா, புள்ளம்பாடி ஒன்றியம் பி.கே.அகரம் அரிஜனதெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பி.கே.அகரம்.

திருட்டு போகும் தலைக்கவசங்கள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சமீப காலமாக இருசக்கர வாகனங்களில் வைத்துவிட்டு செல்லும் தலைக்கவசங்களை மர்மநபர்கள் திருடிச்செல்கின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

பாலம் சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம் உடையாப்பட்டி-குளித்தலை சாலையானது பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் தினமும் சென்றுவரும் சாலையாகும். மேலும் கனரக வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை பாலம் உள்ளது. அந்த பாலமானது சேதமடைந்த நிலையிலும், மின்விளக்கு அற்ற நிலையிலும் உள்ளதால் இப்பகுதியினர் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சரிசெய்து, மின்விளக்குகளும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், சேங்குடி.

மேலும் செய்திகள்