புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரிசி ஆலைகள் இடம் மாற்றப்படுமா?
ஆலங்குடி பேரூராட்சி வ.ஊ.சி. தெரு, குறிஞ்சிநகர், கண்ணகி தெரு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. இதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த ஆலையில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மற்றும் சாம்பல், நெல் உமி போன்றவற்றால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த அரிசி ஆலைகளை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலங்குடி.
நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதால் பலருக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களை இவை கடிக்க பாய்வதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காலாடிபட்டி சத்திரம் கிராமமானது முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. மேலும், எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்றவண்ணம் உள்ளதால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே, சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.
பஸ் வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து குளவாய்ப்பட்டி, காட்டுப்பட்டி, குடுமியான்மலை வழியாக பஸ் சேவை தொடங்கினால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளவாய்ப்பட்டி.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
விராலிமலை தாலுகா, தென்னம்பாடி ஊராட்சி ஒன்றியம் கூத்தக்குடி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி கட்டிடமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் கற்பதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
செல்வம், கூத்தக்குடி.