< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 March 2023 12:00 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:- திருச்சி

விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

முசிறி-தா.பேட்டை சாலையில் உள்ள தும்பலம் கிராமத்தில் மெயின்ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே மாலை நேரங்களில் சிக்கன் உள்ளிட்ட உணவுகள் விற்கின்றனர். இதனை வாங்கி சாப்பிடுபவர்கள் கோழிக்கறியின் எலும்புகளை சாலையிலேயே தூக்கி வீசுகின்றனர். அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் சுற்றுகின்றன. அப்போது அவை இருசக்கர வாகனத்தின் குறுக்கே விழுவதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமோதரன், தா.பேட்டை.

சாலை புதுப்பிக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியத்திலுள்ள கொடியாலம்-புலிவலம் கிராமங்களுக்கு இடையேயான சுமார் 2 கிலோமீட்டர் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் போக்குவரத்திற்கு சவாலாக உள்ளது. இந்த சாலையிலுள்ள கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கொடியாலம்.

சுகாதாரமற்ற கழிப்பிடம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசி, நோய்களை பரப்பக்கூடிய இடமாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை பராமரிக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சுரேஷ்குமார், திருச்சி.

மண் குவியல் அகற்றப்படுமா?

திருச்சி கல்லா தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால் கடந்த ஒரு வாரமாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இங்கு அரசின் சார்பில் சாலையில் குழி தோண்டப்பட்டது. இதனால் மண் குவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கு தார்சாலை அமைக்கப்பட்ட பிறகும் குவிக்கப்பட்ட மண்ணை அகற்றவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குழந்தைவேலு, திருச்சி.

கலங்கலான குடிநீர்

திருச்சி 18-வது வார்டு, பூக்கொல்லை, அலங்கநாதபுரம், வீரமாநகரம், தஞ்சை மெயின்ரோடு, கிருஷ்ணாபுரம், ஜின்னா திடல் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீரில் சாக்கடை மற்றும் செம்மண் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சையது முஸ்தபா, பூக்கொல்லை.

மேலும் செய்திகள்