< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 March 2023 11:55 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்தை சீரமைக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம்,வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிபட்டியில் ஒடம்புரா குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி அப்பகுதியில் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது குளத்தில் ஆங்கே செடி, கொடிகள் முளைத்து முட்புதர்போல் காட்சியளிக்கிறது. மேலும் சிலர் குளத்தை ஆக்கிமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜேஷ் கண்ணன், நெம்மேலிபட்டி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

புதுக்கோட்டை சாமி சன்னதி தெருவில் சாக்கடைகள் முறையாக தூய்மை செய்யப்படவில்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் கடித்து வருதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கடையை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோகன் குமார், புதுக்கோட்டை

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சி பாலன் நகர், மருதுபாண்டியர் நகர், சிப்காட் நகர், ஐ.டி.ஐ. காலனி , கட்டியாவயல் பகுதிகளில் தினந்தோறும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து வாழை, மாமரம், தென்னை மரங்களில் ஏறி இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவுகளை எடுத்து சென்று விடுகிறது. சில நேரங்களில் முதியவர்கள், குழந்தைகளை கடிக்கிறது. இதனால் அனைத்து தரப்பினும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

தீபாபிரபு, மருதுபாண்டியர் நகர்

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி, முனசந்தை, செங்கீரை வழியாக ராயவத்திற்கு தினமும் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் புதுக்கோட்டையில் இருந்து ராயவத்திற்கும், ராயவரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று வர சுமார் 1.30 மணி நேரம் இடைவெளி ஆகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவரச நேரத்திற்கு சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லை, செங்கீரை.

தினத்தந்தி புகார்பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் கடம்பராயன்பட்டி சாலையில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் உள்ள சாலையில் ஏராளமான இடங்களில் வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசாமல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூசி, எச்சரிக்கை பலகைகளையும் வைத்துள்ளனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

மேலும் செய்திகள்