பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டி 8-வது வார்டு அம்பேத்கார் காலனியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
முத்துலெட்சுமி, ஈச்சம்பட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே குப்பை தொட்டியில் இருந்து குப்பைகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் விழுந்தது. இதனால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளிப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சாக்கடை அடைப்பை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், செட்டிகுளம்.
உயர்மின் கோபுரத்தை சரி செய்ய கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் சின்னாங்குட்டையில் உயர்மின் கோபுரம் ஒன்று உள்ளது. கடந்த 15 நாட்களாக இந்த உயர்மின் கோபுரத்தில் பல்புகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பாலையூர்.