திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நத்தம் பஸ் நிறுத்தம் முதல் சிவன் கோவில், அஞ்சல் அலுவலகம், அரசு துணை சுகதாரா நிலையம் மற்றும் பெருமாள் கோவில் வழியாக அகண்ற காவிரி ஆற்றங்கரை வரை சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுடன் சாலையில் சென்று வருகிறார்கள். ஆகவே பொதுநலன் கருதி நத்தம் சிவன் கோவில், பெருமாள் கோவில் செல்லும் சாலைகள் உடனடியாக புனரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சண்முகவேல், கூன்ராக்கம்பட்டி
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூர் பெரும்பாதை கோட்டப்பிள்ளையார் கோவில் அருகே வயல்களுக்கிடையே செல்லும் உயரழுத்த மின்கம்பிகள், இரு கம்பங்களுக்கிடையே தொங்கிய படி மிகவும் தாழ்வாக செல்வதால், அப்பகுதியை கடப்பவர்கள் உயிர் பயத்தோடு செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக குச்சியால் முட்டுக்கொடுத்து மின்கம்பிகள் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகாரளித்தும் பலனில்லாததால், சம்மந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நடக்க இருக்கும் விபரீதங்களை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள், பி.மேட்டூர்
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்துள்ள வேளையில், வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நீரின் தேவையும் அதிகரித்துள்ளதால், குடிநீர் வினியோகத்தை சீர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காமராஜ்நகர்
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பாலக்கரை சிவன் கோவில் வரை 2 பக்கமும்தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அவசர நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை இப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அசோக்குமார், துறையூர்
கிடப்பில் போடப்பட்ட பணி
திருச்சி மாநகராட்சி அம்மாகுளம் பகுதியில் பாதாள சாக்காடை பணிகள், பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு பணிகள் முழுமையாக செய்யப்படாமல் பாதியில் நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் நிற்கும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முஸ்தப்பா, அரியமங்கலம்
அடிக்கடி ஏற்படும் மின்தடை
திருச்சி குமரன் நகர் 14-வது தெருவில் உள்ள மரம் ஒன்று மின் இணைப்பில் உரசுவதால் இப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாம்சன், திருச்சி
வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்
திருச்சி மாநகராட்சி தஞ்சை மெயின் ரோட்டிலிருந்து பாப்பாக்குறிச்சி செல்லும் தார் சாலையில் 3 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரகுமான், காட்டூர்