அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்திற்கு இடையூறு
அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பழைய நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறிப்பாக மாவட்ட நூலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள செட்டேரிமேடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. சில மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.
பொதுமக்கள், அரியலூர்.
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பிரபாகரன், செந்துறை
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து
அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் உள்ள மண்ணுழி கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு தென்புறத்தில் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது. இந்த வளைப்பகுதியில் சாலையோரத்தில் தினமும் கனரக லாரிகள் ஏராளமானவை நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் அந்த இடத்தில் எந்த வேகத்தடையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளைவுபகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.
அசுத்தமாகும் ஏரி நீர்
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பரணம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரத்தில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு காலிபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை ஏரியில் வீசி செல்கின்றனர். இதனால் ஏரி தண்ணீர் அசுத்தமாகி வருகிறது. மேலும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பரணம்