< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 March 2023 12:01 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பன்றிகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுப்பட்டி.

கொசுக்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் ஏராளமான கொசுக்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், உடல்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மீனாட்சி சுந்தரம், வலையப்பட்டி.

தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்களம், எம்.உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழ தானியம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி, நல்லூர், கூடலூர், அரசமலை, மறவாமதுரை, சேரனூர், நெருஞ்சிகுடி, காரையூர் உட்பட15-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. எனவே இக்கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் தீ விபத்து, பாம்புகளின் தொல்லை, கிணற்றில் ஆடு, மாடுகள் விழுதல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும் போது விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காரையூர்

விடுபட்ட சாலையால் மக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்திலிருந்து ஆதனக்கோட்டை தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் சிதிலமடைந்த தார் சாலை புதிய தார்சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அப்போது தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை வரை புதிய தார்சாலை போடாமல் 50 அடி தூரம் இடைவெளி விட்டு போட்டுள்ளனர். விடுபட்ட 50 அடி தூர குண்டும், குழியுமான தார்சாலையினை புதிய தார்சாலையாக சீரமைத்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கணேஷ்பாபு, கணபதிபுரம்

கூடுதலாக பஸ்கள் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி வழியாக கந்தர்வக்கோட்டைக்கு 4 எண் கொண்ட நகர பஸ் இந்த வழியாக வந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள் என இந்த வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் இந்த வழித்தடத்தில் கூடுதலாக நகரப்பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வைரமுத்து, ஆதனக்கோட்டை

மேலும் செய்திகள்