அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்திற்கு இடையூறு
அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து பழைய நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் குறிப்பாக மாவட்ட நூலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள செட்டேரிமேடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூராக மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. சில மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
செயல்பாட்டிற்கு வராத மழைமானி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மழை காலங்களில் மழை அளவு கணக்கிடுவதற்கான மழைமானி அமைப்பு நிறுவப்பட்டது. விவசாய பயன்பாட்டுக்கான இந்த மழைமானி இதுவரை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைமானியை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமமூர்த்தி, ஜெயங்கொண்டம்.
பயன்பாட்டிற்கு வராத மின் விளக்குகள்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் பலர் காயம் அடைவதுடன், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ெபாதுமக்கள், மீன்சுருட்டி.
பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சியில் உள்ள சொக்கலிங்கபுரம் பழைய தெருவில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிந்து சுமார் ஓராண்டு ஆகிய நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாதவன், சொக்கலிங்கபுரம்.
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ சிந்தாமணி மற்றும் மேல சிந்தாமணியை இணைக்கும் மண்வழி சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஹரி, கீழ சிந்தாமணி.